செய்திகள்

ஜல்லிக்கட்டு நடத்த சட்டத்தை மீறக்கூடாது: தமிழிசை

Published On 2017-01-09 12:10 IST   |   Update On 2017-01-09 12:10:00 IST
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் குவிவதும், அவர்களது உணர்வும் வரவேற்கத்தக்கது. அதற்காக சட்டத்தை மீறக்கூடாது என்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை:

சாலிகிராமத்தில் பொது மக்களும், பொது நல அமைப்புகளும் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி அந்த பகுதியில் செல்லும் பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுவார்கள்.

10-வது ஆண்டான இன்று காலை 5 மணி முதல் 8 மணி வரை அந்த பகுதி வழியாக சென்ற அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு சால்வை அணிவித்து பரிசும் வழங்கினார்கள். அதை அந்த பகுதியில் வசிக்கும் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எதற்கெடுத்தாலும் குறையே சொல்லிக் கொண்டிருக்கும் போது ஆண்டு முழுவதும் மக்களுக்கு சேவை செய்யும் டிரைவர், கண்டக்டர்களை நன்றியுடன் பாராட்டுவது பாராட்டுக்குரியது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வலுவான முறையில் தடை போடப்பட்டதால் அதை நீக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது, கடந்த முறை அரசாணை பிறப்பித்தும் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி ஆகிவிட்டது. அந்த அனுபவத்தின் மூலம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற உணர்வு இருப்பதால் தான் வலுவான ஆதாரங்களுடன் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வாதிடுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் குவிவதும், அவர்களது உணர்வும் வரவேற்கத்தக்கது. அதற்காக சட்டத்தை மீறக்கூடாது. சட்ட அங்கீகாரத்துடன் நடத்துவதற்கான வாய்ப்பு இருக்கும் போது எதிர்மறையாக ஏன் நினைக்க வேண்டும். சட்டரீதியாக அணுகி நிச்சயம் அனுமதி பெறுவோம்.

மத்திய அரசு ரொக்கமில்லா பரிமாற்ற முறையை ஊக்குவிக்கும் போது பெட்ரோல் நிலையங்கள் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு பெட்ரோல் போட மாட்டோம் என்று போராட முனைவது மத்திய அரசின் திட்டத்தை முடக்குவது போன்றது. அவர்களின் கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அதிகார அமைப்புகளிடம் பேசி நிறைவேற்றலாம். அதற்கு பதிலாக பொது மக்களை சிரமத்துக்குள்ளாக்க நினைப்பது துரதிருஷ்டமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News