செய்திகள்

புதுவை விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலம் வழங்க தமிழக அரசு சம்மதம்: நாராயணசாமி

Published On 2016-12-26 10:39 GMT   |   Update On 2016-12-26 10:39 GMT
விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலம் வழங்க தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி:

முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் வாழும் பழங்குடியின மக்கள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மத்தியஅரசு புதுவையில் பழங்குடியின மக்கள் இல்லை என்று தொடர்ந்து கூறி வந்தது.

இந்த நிலையில் மக்கள் தொகை பதிவேடு அலுவலகம் புதுவையில் பழங்குடி மக்கள் வாழ்கிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்தது. பின்னர் மத்திய அரசுக்கு புதுவை மழைவாழ் மக்களுக்கு அங்கீகாரம் அளிக்கும்படி பரிந்துரையும் செய்தனர். இதன் அடிப்படையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி புதுவையில் வாழும் பழங்குடி மக்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளார்.

இருளர், வில்லி, வேட்டைக்காரன் ஆகிய 3 சமூகத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 சமூகங்களுக்கு தொடர்ந்து அனுமதி கேட்டு வருகிறோம். வைத்திலிங்கம் முதல்-அமைச்சராக இருந்த போது பழங்குடி மக்களுக்கு ஒரு சதவீதம் இடஒதுக்கீடு அளித்தோம். இதன் மூலம் அந்த சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். சட்டதுறையுடன் கலந்து பேசி பழங்குடிஇன மக்களுக்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற போது மத்திய விமானத்துறை மந்திரியை சந்தித்து புதுவையில் விமான போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். தனியார் மட்டுமல்லாது இந்தியன் ஏர்லைன்ஸ் மூலமும் விமான போக்குவரத்து தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.

புதுவையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூர், திருப்பதி, கொச்சின், கோவை ஐதராபாத் போன்ற இடங்களுக்கு விமான சேவை தொடங்க திட்டமிட்டுள்ளோம். ஒரு இருக்கைக்கு ரூ.2.500 கட்டணமும், அதற்கு மேலான செலவு தொகையை விமானத்துறை வழங்கும் என்று மத்திய அரசு அறிவித்தள்ளது. இதற்குரிய நடவடிக்கையை எடுக்கும்படி கேட்டுள்ளேன்.

புதுவை விமான தளத்தின் ஒடுதளத்தை விரிவாக்க தமிழக அரசு நிலம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தோம். தற்போது தமிழக அரசு புதுவை அரசின் கோரிக்கையை ஏற்று லாஸ்பேட்டை விமான தளம் அருகில் உள்ள தமிழக பகுதி இடங்களை அளவீடு செய்யும் பணியை தொடங்கி உள்ளது. இந்த நிலம் கிடைக்கும் போது பெரியரக விமானங்கள் புதுவைக்கு வருவது சாத்தியமாகும்.

மத்திய சுகாதாரதுறை மந்திரி ஜே.பி. நட்டாவை டெல்லியில் சந்தித்தேன். அவரிடம் புதுவை அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன். நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் 15 சதவீதம் இடஒதுக்கீடு அனைத்து மருத்துவ கல்லூரிகளில் வழங்கப்படும்.

இதேபோல் புதுவையில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பிற மாநிலத்தில் மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைக்கும். இதுதவிர வழக்கம்போல் சென்டாக் மூலம் மருத்துவகல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்ட மேற்படிப்பு தொடங்க அனுமதி அளிக்கும்படி மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் வலியுறுத்தி உள்ளேன்.

பிரதமரின் செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு புதுவையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அரசின் வரி வருவாயில் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் பண அ ட்டை மூலம் வர்த்தகம் செய்ய மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இதற்கு புதுவையில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அதனை நடைமுறை படுத்த முடியாது என தெரிவித்துள்ளோம். இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதமும் எழுதி உள்ளேன். மேலும் ஜனவரி மாதம் டெல்லி செல்லும் போது பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து அவரிடம் புதுவை அரசின் நிதித்துறை செயலாளர் அனைத்து அரசு துறைகளுக்கும் பண அட்டை மூலம் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளாரே என்று நிருபர்கள் கேட்ட போது இதுதொடர்பபாக நிதித்துறை செயலாளரை அழைத்து பேச உள்ளதாக நாராயணசாமி தெரிவித்தார்.

Similar News