செய்திகள்

தேவகோட்டையில் சுடுகாட்டு கொட்டகையில் பெண் மர்ம மரணம்

Published On 2016-12-25 18:41 IST   |   Update On 2016-12-25 18:41:00 IST
சுடுகாட்டு கொட்டகையில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேவகோட்டை:

தேவகோட்டை நகர் ஆற்றுப்பாலம் பகுதியில் சுடுகாடு  உள்ளது. இன்று காலை ஆற்றுப்பாலத்தின் அருகே சென்ற சிலர், சுடுகாட்டு கொட்டகையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு  தகவல் கொடுக்கப்பட அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடல் கிடந்த இடத்தில், 3 விஷ பாட்டில்களும் கிடந்தன. எனவே அவர் தற்கொலை  செய்திருக்கலாமா? என்று  சந்தேகம் ஏற்பட்டது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் தேவகோட்டை சரசுவதி வாசகசாலை தெருவைச் சேர்ந்த சாந்தி (வயது55) என தெரியவந்தது.

இவரது கணவர் ஹரிதாஸ், கடலூர் நகராட்சி அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது தேவகோட்டை பஸ் நிலையத்தில் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்துள்ளார்.

இவர்களது மூத்த மகள் ஆஸ்திரேலியாவில் உள்ளார். சென்னையில் வசிக்கும் 2-வது  மகள் பிரசவத்திற்காக தேவகோட்டை வந்து இருந்தார்.  அவருக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்து, ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில் சாந்தி சுடுகாட்டில் இறந்து கிடந்தது மர்மமாக உள்ளது. கடவுள் பக்தி நிறைந்த அவர், கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு புறப்பட்டுள்ளார். ஆனால் இடைப்பட்ட சிலமணி நேரத்திற்குள் அவர், பிணமாக சுடுகாட்டு கொட்டகையில் கிடந்துள்ளார். இதனால் அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. அவர் தற்கொலை செய்தார் என்றால், அதற்கான காரணம் என்ன? என்பதும் மர்மமாக உள்ளது.

இதுகுறித்து  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News