செய்திகள்

தேவகோட்டையில் இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை

Published On 2016-12-22 17:35 IST   |   Update On 2016-12-22 17:35:00 IST
தேவகோட்டையில் தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.

தேவகோட்டை:

தேவகோட்டை நகர் ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் என்ற பிரபு. இவரது மனைவி கற்பகம் (வயது20). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு பெண் குழந்தை உள்ளது.

காளிதாஸ் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கற்பகம் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். பக்கத்து தெருவில் தான் அவரது பெற்றோர் வீடு உள்ளது. நேற்று மாலை அங்கு கற்பகம் சென்றுள்ளார். பின்னர் இரவில் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்க வில்லை. இதனால் அவரது பெற்றோர் விரைந்து வந்து கதவை தட்டி பார்த்தனர். ஆனால் உள்ளே இருந்து எந்தவித சத்தமும் வராததால் வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்துள்ளனர்.

அப்போது கற்பகம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பது தெரியவர, போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தேவகோட்டை நகர் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் விரைந்து சென்று பார்வையிட்டார். அப்போது கற்பகம் இறந்து விட்டது தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது மர்மமாக உள்ளது.

இதுகுறித்து துணை கண்காணிப்பாளர் கருப்புசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

Similar News