செய்திகள்

பெருங்களத்தூர் அருகே 10 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள் சாலைமறியல்

Published On 2016-12-21 14:37 IST   |   Update On 2016-12-21 14:37:00 IST
பெருங்களத்தூர் அருகே 10 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாம்பரம்:

சென்னையில் கடந்த 12-ந்தேதி ‘வார்தா’ புயல் தாக்கியது. இதனால் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தீவிர சீரமைப்பு பணிகளும், மீட்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் சென்னையில் மின் விநியோகம் சீரடைந்தது. புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் புயல் தாக்கிய 10 நாட்களுக்கு பிறகு பெருங்களத்தூர் பகுதியில் இன்னும் மின்சார விநியோகம் சீரடையவில்லை. பெருங்களத்தூரை அடுத்த நெடுங்குன்றம், சதானந்தபுரம், ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 10 நாட்களாக மின்சாரம் இல்லை.

இப்பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகமும், அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரும் இன்றி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இரவு நேரங்களில் கொசுத் தொல்லை அதிகம் உள்ளது. இதனால் நிம்மதியாக தூங்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். அரையாண்டு தேர்வு நடைபெறும் நேரத்தில் படிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் தவிக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று நெடுங்குன்றம், சதானந்தபுரம், மற்றும் ஆலப்பாக்கம் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சதானந்தபுரம் மெயின் ரோட்டில் இப்போராட்டம் நடைபெற்றது.

இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இன்று மாலைக்குள் மின் விநியோகம் வழங்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Similar News