செய்திகள்

செங்குன்றத்தில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் மறியல்

Published On 2016-12-17 12:48 IST   |   Update On 2016-12-17 12:48:00 IST
செங்குன்றத்தில் 6 நாட்களாக மின்சப்ளை பாதிப்பால் பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மின்சாரம் வழங்கக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்குன்றம்:

செங்குன்றம் அருகே உள்ள நாரவாரிகுப்பம் பகுதியில் வார்தா புயலால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது.

கடந்த 6 நாட்களாக மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்தனர். குடிநீர் கேன்கள், மெழுகுவர்த்தி விலை உயர்ந்தது.

மின்சாரத்தை உடனே வழங்கக்கோரி செங்குன்றம் பஸ் நிலையம் அருகே நேற்று இரவு சுமார் 200 பேர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் செங்குன்றம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதைப்போல் மின் தடையை கண்டித்து செங்குன்றம் ஆர்.வி.என். நகர் பகுதி மக்கள் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செங்குன்றம் அருகே உள்ள சோத்துபாக்கம் என்ற இடத்தில் திடீர் சாலை மறியல் செய்தனர். தேசிய நெடுஞ்சாலை என்பதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் போலீசார் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.

மின்தடையை கண்டித்து பாடியநல்லூர் அருகே எம்.ஏ. நகர் பொது மக்கள் செங்குன்றம் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் செங்குன்றம் ஆலமரம் பகுதியில் சாலை மறியல் செய்தனர்.

தகவல் அறிந்ததும் செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தி பொது மக்களை கலைந்து போக செய்தனர்.

மின்தடையை கண்டித்து வேப்பம்பட்டு அருகே உள்ள தான்வட்நகர், ஞானமுத்து நகர், ஜானகிராமன்நகர், பூம்புகார் நகர் பொது மக்கள் இன்று காலை வேப்பம்பட்டு பஜார் சாலையில் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை போலீசார் விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

Similar News