செய்திகள்

மரக்காணம் அருகே தனியார் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்

Published On 2016-12-16 11:29 GMT   |   Update On 2016-12-16 11:29 GMT
மரக்காணம் அருகே தனியார் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.
மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஓமிப்பேரில் அரசுக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் உள்ளது. தனியார் ஒருவர் இந்த நிலத்தை ஆக்கிரமித்து கரும்பு, நெல் பயிரிட்டுள்ளார்.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் விவசாய சங்க தலைவர் ஏழுமலை மனு கொடுத்தார்.

இதையொட்டி வருவாய் ஆய்வாளர் மோகனப்பிரியா நேற்று ஓமிப்பேர் பகுதிக்கு வந்தார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தை பார்வையிட்டு சென்றார். ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.

இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி ஓமிப்பேரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இன்று பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். விவசாய சங்க தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அவர்கள் கோ‌ஷமிட்டனர். கிராம மக்களின் திடீர் உண்ணாவிரத போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News