செய்திகள்

ரோட்டோரம் உள்ள வீட்டுக்குள் லாரி புகுந்தது: கணவன் - மனைவி படுகாயத்துடன் தப்பினர்

Published On 2016-12-16 15:56 IST   |   Update On 2016-12-16 15:57:00 IST
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே ரோட்டோரம் உள்ள வீட்டுக்குள் லாரி புகுந்த விபத்தில் உள்ளே படுத்து தூங்கி கொண்டிருந்த கணவன் - மனைவி படுகாயத்துடன் உயிர் தப்பினர்.
ஈரோடு:

சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து கோவைக்கு ‘ஆசிட்’ (திராவகம்) ஏற்றி வர ஒரு டேங்கர் லாரி நேற்று இரவு புறப்பட்டு வந்தது. லாரியை மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரை சேர்ந்த பாலு (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி நேற்று இரவு 10 மணியளவில் ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி சந்தை கடை பக்கம் வந்து கொண்டிருந்தது.

திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் உள்ள ஒரு ஓட்டு வீட்டை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது.

அப்போது வீட்டுக்குள் படுத்து தூங்கி கொண்டிருந்த ராஜமாணிக்கம் (52). அவரது மனைவி கீதா (45) ஆகியோர் மீது லாரி மோதியதிலும், சுவர் இடிந்து விழுந்ததிலும் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அக்கம்பக்கம் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். பிறகு அவர்கள் கணவன்-மனைவி இருவரையும் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த லாரி டிரைவர் பாலுவும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி மோதியதில் வீடு முற்றிலும் இடிந்து சேதமாகி விட்டது.

Similar News