செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே சம்பா பயிர் கருகியதால் விவசாயி வி‌ஷம் குடித்தார்

Published On 2016-12-15 09:59 GMT   |   Update On 2016-12-15 09:59 GMT
திருத்துறைப்பூண்டி அருகே பயிர் கருகியதால் மனம் உடைந்த விவசாயி வி‌ஷம் குடித்தார்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள செட்டியமூலை வடபாதி பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் (40) விவசாயி. இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் மேலகோட்டகத்தில் உள்ளது. அதில் சம்பா சாகுபடி செய்திருந்தார். போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகி வருகிறது.

இதனால் சண்முகவேல் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்தார். இவரது மகள் திருச்சியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு கல்வி கட்டணம் செலுத்த கல்வி கடன் கேட்டு ராயநல்லூரில் உள்ள வங்கிக்கு பல முறை சென்றும் பணம் கிடைக்கவில்லை.

சம்பா சாகுபடியையும் காப்பாற்ற வழியில்லை. மகள் படிப்பு தொடரவும் வங்கியில் கடன் கிடைக்கவில்லை என்பதால் மனம் உடைந்த சண்முகவேல் வி‌ஷம் குடித்தார்.

இதில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆலிவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டெல்டா மாவட்டங்களில் பயிர் கருகி வருவதால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது, அதிர்ச்சியில் இறப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விவசாயிகளின் தற்கொலை முயற்சிகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News