செய்திகள்

ஈரோடு அருகே உள்ள ஓங்காளியம்மன் கோவிலுக்கு விஜயகாந்த் திடீர் வருகை

Published On 2016-12-12 14:51 IST   |   Update On 2016-12-12 14:51:00 IST
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஈரோட்டுக்கு திடீரென வருகை தந்தார். அங்கு பழமை வாய்ந்த ஓங்காளியம்மன் கோவிலுக்கு சென்ற விஜயகாந்த் பயபக்தியுடன் வழிபட்டார்.

ஈரோடு:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஈரோட்டுக்கு திடீரென வருகை தந்தார். அவரது வருகை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாருக்கும் தெரிய வில்லை.

கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவருக்கு மட்டும் தான் ஈரோடு வருவதாக விஜயகாந்த் கூறி உள்ளார்.

அவரும் விஜயகாந்த் வருகைக்காக காத்திருந்தார், அவரது வருகையை யாரிடமும் சொல்லவில்லை. சொன்னபடி விஜயகாந்த் மட்டும் தனியாக காரில் வந்தார்.

பிறகு ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு விஜயகாந்த் சென்று சிறிது நேரம் தங்கினார். அப்போது நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் சிலரிடம் விஜயகாந்த் பேசி உள்ளார். உடனடியாக நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் சிலரும் விஜயகாந்த் அழைப்பை ஏற்று ஈரோட்டுக்கு விரைந்து வந்தனர்.

அதன்பிறகு விஜயகாந்த் அவர்களை அழைத்துக்கொண்டு ஈரோடுஅருகே உள்ள பள்ளிபாளையம் அடுத்துள்ள கருமகவுண்டம் பாளையம் சென்றார். அங்கு பழமை வாய்ந்த ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்திப் பெற்ற இக்கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டால் விசே‌ஷ பலன் கிடைக்கும் என்பது அவ்வூர் மக்களின் ஐதீகமாக உள்ளது.

இந்த ஓங்காளியம்மன் கோவிலுக்கு சென்ற விஜயகாந்த் பயபக்தியுடன் வழிபட்டார். கிட்டதட்ட ஒருமணி நேரம் கோவிலில் இருந்து அம்மனை வழிபட்டு உள்ளார். அதன்பிறகு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்று விட்டார்.

முதல்வர் ஜெயலலிதா மறைவு இதனால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை அடுத்தக்கட்டமாக தே.மு.தி.க. எடுக்க உள்ள நடவடிக்கை கட்சியின் வளர்ச்சி போன்ற பல்வேறு பிரச்சினையில் விஜயகாந்த் திடீரென ரகசியமாக ஓங்காளியம்மன் கோவிலில் சாமிகும்பிட்டுவிட்டு சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே விஜயகாந்த் ஈரோடு வந்துள்ள ரகசிய தகவல் கட்சி தொண்டர்களுக்கு தெரியவர அவர் தங்கிய ஓட்டல் முன் கட்சி கொடிகளுடன் திரண்டனர்.

பல மணி நேரம் காத்திருந்தும் விஜயகாந்த் வராததால் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

Similar News