வேதாரண்யத்தில் விவசாய பாதுகாப்பு சங்க உண்ணாவிரத போராட்டம்: தா.பாண்டியன் பங்கேற்பு
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு நாகை-திருவாரூர் மாவட்ட குடிக்காணி மற்றும் குத்தகை சாகுபடிதாரர்கள் விவசாய பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சங்கத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. மா.மீனாட்சி சுந்தரம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். சங்க செயலாளர் கலிதீர்த்தான் வரவேற்றார்.
கோவில் மனை குடியிருப்போர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், சங்க மாநில பொதுச்செயலாளர் சிவபுண்ணியம், பொருளாளர் ஏழுமலை, திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ., ஆடலரசன் முன்னாள் எம்.பி. செல்வ ராசு, பட்டணம் மனை குடியிருப்போர் நல சங்க செயலாளர் சங்கரவடிவேலு, சங்க மகளிரணி பூங்கொடி, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றியச் செயலாளர் சிவகுருபாண்டியன், ஆர்.எஸ்.மணி, ம.தி.மு.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். உண்ணாவிரத்தை இந்திய கம்யூனிஸ்டு தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் முடித்து வைத்து சிறப்புரையாற்றினார்.
போராட்டத்தில் கோவில் மனையில் குடியிருக்கும் அனைவருக்கும் முதற்கட்டமாக வீட்டு மனை பட்டாவும், படிப்படியாக சாகுபடி நிலங்களுக்கு நிரந்தர பட்டாவும் வழங்கவும், பட்டாயின்றி குடியிருப்போருக்கு மின் இணைப்பு உடன் வழங்கவும், அறநிலையத்துறை புதிதாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் குடிக்காணி குத்தகை நிலங்களுக்கு மனைப்பகுதி வாடகை முறை, நன்கொடை முறைகள் ரத்து செய்து வழக்கம் போல் நிலவரி வசூல் செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது.
முடிவில் சங்க பொருளாளர் அருள்ஜோதி நன்றி கூறினார்.