செய்திகள்

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் மேலும் குறைந்தது

Published On 2016-11-29 04:23 GMT   |   Update On 2016-11-29 04:23 GMT
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் வேகமாக குறைந்து வருகிறது.
சென்னை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் வேகமாக குறைந்து வருகிறது.

கடல் போல் காட்சி அளிக்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த ஆண்டு இதே நாளில் 3125 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. ஆனால் இப்போது வெறும் 252 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

தினசரி இங்கிருந்து 92 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருகிறது.

இதே நிலை நீடித்தால், அடுத்த மாதம் ஏரி முழுமையாக வறண்டு விடும் அபாயம் உள்ளது.

வடசென்னை, மத்திய சென்னைக்கு குடிநீர் வழங்கும் இன்னொரு ஏரியான புழல் ஏரியில் கடந்த ஆண்டு இதே நாளில் 2763 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. ஆனால் இப்போது 295 மில்லியன் கன அடிதான் உள்ளது. ஏரியில் இருந்து குடிநீருக்காக 125 கனஅடி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

பூண்டி ஏரியை பொறுத்தவரை மழை நீர் இல்லாததால் கிருஷ்ணா தண்ணீரை நம்பிதான் உள்ளது. தற்போது 383 கனஅடி தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர் மட்டம் வெறும் 131 மில்லியன் கனஅடியாக உள்ளது.

சோழவரம் ஏரியில் 73 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 624 மில்லியன் கனஅடி இருந்தது.

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் அடுத்த மாதம் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Similar News