செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2016-11-28 03:07 GMT   |   Update On 2016-11-28 03:07 GMT
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 750 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்:

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் இந்த ஆண்டு போதிய அளவு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இந்த அணைகளில் இருந்து தற்போது தண்ணீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதே போல் வடகிழக்கு பருவமழையும் போதிய அளவு பெய்யவில்லை.

இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அணை நீர்மட்டம் 85 அடிக்கும் மேல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அணை நீர்மட்டம் 40.99 அடியாக குறைந்துள்ளது.

அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 155 கனஅடியாக இருந்தது. நேற்று இந்த நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 97 கனஅடியாக உள்ளது.

அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் வீதம் நேற்று முன்தினம் வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இந்த தண்ணீர் திறக்கும் அளவு நேற்று பகலில் இருந்து வினாடிக்கு 750 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Similar News