செய்திகள்

எதிர்க்கட்சிகள் நாளை போராட்டம் நடத்துவது அவசியமற்றது - தமிழிசை

Published On 2016-11-26 21:07 GMT   |   Update On 2016-11-26 21:07 GMT
எதிர்க்கட்சிகள் நாளை போராட்டம் நடத்துவது அவசியமற்றது என்றும், கருப்பு பண ஒழிப்புக்கு ஆதரவாக பிரதமருடன் கைகோர்ப்போம் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பொதுமக்கள் பாராட்டு

கருப்பு பண ஒழிப்பிற்காக நம் பிரதமர் நரேந்திரமோடி எடுத்த நடவடிக்கையை, பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள். அதைப் பொறுக்காத எதிர்க்கட்சியினர் போராடி வருகிறார்கள். 28–ந் தேதி (நாளை) அன்று அவர்கள் அறிவித்திருக்கும் போராட்டம் அவசியமற்றது, அர்த்தமற்றது. அதை முறியடிக்க நாளைய தினம் பா.ஜ.க. தொண்டர்கள் கருப்பு பண ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடவும், பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கருப்பு பண ஒழிப்பிற்கு ஆதரவு தர வேண்டுமே தவிர அதை எதிர்த்து போராடுபவர்களுக்கு ஆதரவு தரக்கூடாது எனவும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

நாளைய தினம் ‘‘மக்களுக்காக மோடி மக்களுடன் மோடி’’ என்று மக்களின் விமரிசையான வாழ்க்கைக்காக எத்தனை விமர்சனங்களையும் தாங்கிக்கொள்வேன் என்று பணியாற்றும் மோடிக்கு ஆதரவு பிரசாரத்தை நாளைய தினம் முதற்கொண்டு பா.ஜ.க. தொண்டர்கள் மேற்கொள்வார்கள். சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை திணிக்க இருந்தவர்கள் காங்கிரஸ். அவர்களுக்கு ஆதரவளித்தது தி.மு.க. ஆனால் அதை அன்று கடுமையாக எதிர்த்து சிறுவணிகத்தைக் காப்பாற்றியது பா.ஜ.க. அதனால் வணிகச் சகோதரர்கள் இந்த கடையடைப்பில் கலந்துகொள்ள கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
மிகப்பெரிய சேவை

விவசாயிகள் இப்போராட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். வாரம் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் உச்சவரம்பு இருக்கும் போது விவசாயிகள் மட்டும் ரூ.25 ஆயிரம் எடுத்துக்கொள்ளலாம் என்று பல சலுகைகளை விவசாயிகளுக்கு மோடி அறிவித்துள்ளார்.

மேலும் நபார்டு வங்கி மூலம் பண பரிவர்த்தனைக்கு ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கியது மற்றும் விவசாயிகள் பாதிக்கக்கூடாது என்று மீத்தேன் திட்டத்தை ரத்து செய்தது, சிறுவாணி அணைக்கட்டுவதை தடுத்தது மட்டுமல்லாமல் விவசாயிகள் நலனில் தனிக்கவனம் செலுத்துவோம் என்று அறிவித்திருக்கும் மோடி அரசை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில், கருப்பு பண ஒழிப்பிற்கு ஆதரவாக பிரதமருடன் கைகோர்ப்பதே நாம் இந்த நாட்டிற்கு செய்யும் மிகப்பெரிய சேவையாகும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News