செய்திகள்

ரூபாய் நோட்டு பிரச்சினை: ராமேசுவரத்தில் 8 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

Published On 2016-11-26 11:08 GMT   |   Update On 2016-11-26 11:08 GMT
ரூபாய் நோட்டு பிரச்சினையால் ராமேசுவரத்தில் இன்று முதல் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.

ராமேசுவரம்:

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து பணவர்த்தனை பாதிக்கப்பட்டது. இதனால் மீன்பிடி தொழில் செய்ய சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறி ராமேசுவரத்தில் இன்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினார்கள்.

சுமார் 3 ஆயிரம் விசைப்படகுகள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. இந்த போராட்டத்தில் ராமேசுவரம் பகுதிகளை சேர்ந்த 8 ஆயிரம் மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதுதொடர்பாக விசைப் படகு மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து மீன்பிடி தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க நடமாடும் ஏ.டி.எம். மூலம் மீனவர்களுக்கு பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணப்புழக்கம் சீராகும் வரை வேலை நிறுத்தம் நடைபெறும். அதுவரை மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் புதிதாக கட்டப்பட்டு டிசம்பர் 7-ந் தேதி திறக்கப்பட உள்ளதால். இந்த விழாவில் மீனவர்கள் கலந்து கொள்ள மத்திய அரசு அனுமதி பெற்று தர வேண்டும் என்றார்.

Similar News