செய்திகள்

பணப்பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

Published On 2016-11-25 22:46 GMT   |   Update On 2016-11-25 22:46 GMT
பணப்பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த வாக்குறுதியின்படி வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காதது ஏன்?. அதேபோல உள்நாட்டில் உள்ள பெரும் தொழில் அதிபர்கள் வங்கியில் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் வராக்கடனை வசூல் செய்ய முன்வராதது ஏன்?.

வானொலி மற்றும் வாட்ஸ்–அப் மூலமாக தன்னை முன்னிலைப்படுத்தும் பிரதமர் மோடி நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தின் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அரசியல் பாகுபாடின்றி எழுப்பும் இந்த பணப் பிரச்சினை தொடர்பான நியாயமான கேள்விகளுக்கு பதில்சொல்ல தயங்குவது ஏன்?.

மத்திய அரசு அறிவித்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது ஏற்கனவே பா.ஜ.க.வினருக்கும், பெரும் தொழில் அதிபர்களுக்கும் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே பாராளுமன்ற உறுப்பினர்களின் நியாயமான உணர்வுகளைப் புரிந்துகொண்டு பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். மேலும் பிரதமர் பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் பணப்பிரச்சினைக்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டியது ஜனநாயகக் கடமையாகும்.

மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கை கண்டித்து த.மா.கா. தொடர்ந்து போராடும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News