செய்திகள்

இளவரசன் மர்ம மரணம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு

Published On 2016-11-25 08:19 GMT   |   Update On 2016-11-25 08:19 GMT
தர்மபுரி, நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன் மர்ம மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை:

தர்மபுரி, நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன். வேறு சமுதாயத்தை சேர்ந்த இளம் பெண் திவ்யாவை காதலித்து திருமணம் செய்தார். இதனால் மன வேதனையடைந்த திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து நத்தம் காலனியில் வசிப்பவர்கள் வீடுகள் மீது ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தினர். வீடுகள், வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டன. அதை தொடர்ந்து அந்த பெண், இளவரசனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 4ந் தேதி இளவரசன் அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்ட வாளத்தில் தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து உள்ளூர் போலீசார் மர்ம சாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால், இளவரசன் சாவில் மர்மம் உள்ளதாகவும், இந்த வழக்கை உள்ளூர் போலீசார் விசாரித்தால் நேர்மையாக இருக்காது. அதனால், சிறப்பு புலனாய்வு அமைப்பை உருவாக்கி விசாரிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் இளவரசனின் தந்தை இளங்கோ மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதிமகாதேவன் ஆகியோர் முன்பு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசாரின் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக உள்ளதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Similar News