செய்திகள்

சட்டமன்ற குழுக்களை அமைக்க வேண்டும்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மனு

Published On 2016-11-24 11:01 GMT   |   Update On 2016-11-24 11:02 GMT
சட்டமன்ற குழுக்களை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயர் தனபாலை சந்தித்து மனு கொடுக்க முயன்றனர்.
சென்னை:

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், விஜயதரணி, கணேஷ், ராஜேஷ்குமார், காளிமுத்து ஆகியோர் இன்று தலைமை செயலகம் சென்றனர். அவர்களுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கரும் உடன் சென்றிருந்தார்.

இவர்கள் அனைவரும் சட்டசபை சபாநாயகர் தனபாலை சந்தித்து சட்டமன்ற குழுக்களை அமைக்க வலியுறுத்தி மனு கொடுக்க முயன்றனர். ஆனால் சபாநாயகர் அறையில் இல்லாததால் சட்டசபை செயலாளரிடம் மனு கொடுத்தனர்.

அதன்பிறகு அவை முன்னவரான நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் கே.ஆர்.ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்த பிறகு பட்ஜெட் மீதான விவாதம் நடந்து மானியக் கோரிக்கைகளும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்போது 6 மாதம் ஆகிவிட்ட நிலையில் சட்டமன்ற குழுக்கள் இன்னும் அமைக்கப்படாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

சட்டமன்றத்தை வழிநடத்தி செல்ல பல்வேறு குழுக்கள் உள்ளது. இதில் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றிருப்பார்கள். ஆனால் இதுவரை எந்த குழுக்களையும் அமைக்காமல் உள்ளனர். எனவே சபாநாயகர் காலம் தாழ்த்தாமல் சட்டமன்ற குழுக்களை உடனே அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் மனு கொடுத்திருந்தார்.

Similar News