செய்திகள்

கீழப்பழுவூரில் கிராம நிர்வாக அலுவலரின் மனைவியை தாக்கி 8 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

Published On 2016-11-15 17:29 IST   |   Update On 2016-11-15 17:29:00 IST
கீழப்பழுவூரில் கிராம நிர்வாக அலுவலரின் மனைவியை தாக்கி 8 பவுன் தங்க சங்கிலி பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சிவநேசன். இவர் கீழப்பழுவூர் அருகே உள்ள மேலப்பழுவூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது48), மகன் அருண்குமார் (28) ஆகிய இருவரும் வீட்டில் இருந்தார்.

அப்போது காரில் அங்கு வந்த மர்மநபர்கள் 6 பேர், வீட்டுக்குள் புகுந்து ராஜேஸ்வரியை தாக்கி அவர் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அப்போது அதை தடுக்க முயன்ற அருண்குமாரையும் அவர்கள் தாக்கினர். இதையடுத்து அருண்குமார் வெளியே ஓடி வந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் ராஜேஸ்வரியிடம் பறித்த தங்க சங்கிலியுடன் காரில் தப்பி சென்று விட்டனர்.

மர்ம நபர்கள் தாக்கியதில் காயமடைந்த ராஜேஸ்வரி அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News