செய்திகள்

ரூ.10 ஆயிரம் கோடி பழைய நோட்டுகள் டெபாசிட்: புதிய 500 ரூபாய் நோட்டு 3 நாட்களில் வெளியாகும்

Published On 2016-11-15 14:31 IST   |   Update On 2016-11-15 14:31:00 IST
இந்தியன் வங்கி கிளைகளில் தற்போது வரை ரூ.10 ஆயிரம் கோடி பணம் டெபாசிட் பெறப்பட்டுள்ளது. புதிய 500 ரூபாய் நோட்டுகள் வெளியாவதில் மேலும் 3 நாட்கள் தாமதமாகும் என்று வங்கி அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

சென்னை:

500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து புதிதாக 2000, 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப் பட்டது. இதில் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியாகிவிட்டது.

புதிதாக அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள் நேற்று முதல் வங்கிகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்த ரூபாய் நோட்டுகள் வெளியாவதில் மேலும் 3 நாட்கள் தாமதமாகும் என்று வங்கி அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக இந்தியன் வங்கி பொது மேலாளர்கள் மணிமாறன், ரங்கராஜன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

இந்தியன் வங்கியின் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் இன்று முதல் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்டு வருகிறது. ஏ.டி.எம்.களில் இருந்து இனி அதிகபட்சமாக 2500 ரூபாய் பணம் எடுத்து கொள்ளலாம்.

அதற்கு ஏற்ற வகையில் இந்தியன் வங்கியின் ஏ.டி.எம். மையங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 1300 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன.

100 ஏ.டி.எம். மையங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் நிரப்பட்டுள்ளன. 2 அல்லது 3 நாட்களில் அனைத்து ஏ.டி.எம்.களிலும் 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும்.

புதிய 500 ரூபாய் நோட்டுகள் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை இந்தியன் வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்கள் மூலமாக பெறலாம்.

இதுவரையில் 8 லட்சத்து 79 ஆயிரம் பேர் பழைய நோட்டுகளை கொடுத்து ரூ.341 கோடிகளை பெற்றுள்ளனர். வங்கி கணக்கு, ஏ.டி.எம். மூலமாக 20 லட்சம் பேர் ரூ.743 கோடி பணம் எடுத்துள்ளனர். இந்தியன் வங்கி கிளைகளில் தற்போது வரை ரூ.10 ஆயிரம் கோடி பணம் டெபாசிட் பெறப்பட்டுள்ளது.

சென்னையை தொடர்ந்து மற்ற ஏ.டி.எம்.களிலும் பணம் நிரப்பப்பட்டு வருகிறது. ஒரு வாரத்துக்குள் இப்பணிகள் முழுமையாக நிறைவடையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News