செய்திகள்
பூண்டி ஏரி வறண்டு கிடக்கும் காட்சி.

பூண்டி-புழல் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை

Published On 2016-11-14 07:30 GMT   |   Update On 2016-11-14 07:30 GMT
மழை இல்லாததால் பூண்டி-புழல் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர்:

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது. ஆனால் இதுவரை கனமழை பெய்யவில்லை.

பருவநிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது வெயில்தான் அடிக்கிறது. வறண்ட வானிலையே காணப்படுகிறது.

ஓரிரு சமயங்களில் மேகங்கள் திரண்டாலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.

இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

பூண்டி ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா தண்ணீரும் 5 நாட்களாக வரவில்லை. மழை பெய்யாததால் 4 நாட்களாக மழை நீரும் முற்றிலும் நின்று விட்டது.

3231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் கடந்த ஆண்டு இதே நாளில் 536 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. ஆனால் இப்போது 129 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இங்கிருந்து சென்னை குடிநீருக்காக 116 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

புழல் ஏரியை பொறுத்த வரை கடந்த ஆண்டு இதே நாளில் 533 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. ஆனால் இன்று 425 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. (கொள்ளளவு 3300) ஏரிக்கு 84 கனஅடி தண்ணீர் பூண்டி ஏரியில் இருந்து வருகிறது. சென்னை குடிநீருக்கு 135 கனஅடி எடுக்கப்படுகிறது.

சோழவரம் ஏரியில் கடந்த ஆண்டு இதே நாளில் 196 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இப்போது 74 மில்லியன் கனஅடி தண்ணீர் தான் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து இல்லை.

செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த ஆண்டு இதே நாளில் 1004 மில்லியன் கனஅடி இருந்தது. இப்போது 408 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. (கொள்ளளவு 3645) ஏரிக்கு நீர்வரத்து இல்லை. சென்னை குடிநீருக்காக 55 கனஅடி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளிலும் கடந்த ஆண்டு இதே நாளில் 2269 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. ஆனால் இப்போது 1036 மில்லியன் கனஅடி தண்ணீர் தான் உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

Similar News