அச்சரப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை
மதுராந்தகம்:
அச்சரப்பாக்கத்தை அடுத்த மின்னல் சித்தா மூரில் அரசு மதுபான கடை உள்ளது. சூப்பர் வைசராக முருகன் உள்ளார். நேற்று இரவு அவர் விற்பனை முடிந்து மதுக் கடையை பூட்டி சென்றார்.
இந்த நிலையில் இன்று காலை மதுக்கடை ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. மதுபாட்டில்களும் கடைக்குள் சிதறிக் கிடந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஒரத்தி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 60 பெட்டி மதுபாட்டில்கள் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் இருக்கும். விற்பனை பணத்தை ஊழியர்கள் எடுத்துச் சென்றதால் அவை தப்பியது. மதுபாட்டில் பெட்டிகளை கொள்ளை கும்பல் எடுத்த போது பல பெட்டிகள் சரிந்துள்ளன. இதில் ஏராளமான மதுபாட்டில்கள் சேதம் அடைந்ததாக தெரிகிறது.
இது குறித்து மதுக்கடை ஊழியர்கள் கூறும்போது, ரூ. 500, 1000 நோட்டுகளை நாங்கள் வாங்கவில்லை. இதனால் குடிமகன்கள் சிலர் எங்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இந்த முன்விரோதத்தில் அதே பகுதியை சேர்ந்தவர்கள் மதுபாட்டில்களை கொள்ளையடித்து இருக்கலாம் என்றனர்.
கொள்ளை கும்பல் வாகனத்தில் வந்து மதுபாட்டில் பெட்டிகளை எடுத்து சென்று இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபற்றி தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.