செய்திகள்

சென்னை வாசிகளுக்கு சோதனையான நவம்பர் மாதம்

Published On 2016-11-12 09:38 GMT   |   Update On 2016-11-12 09:38 GMT
சென்னை வாசிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதமும், இந்த ஆண்டு நவம்பர் மாதமும் சோதனைக் காலமாகவே மாறிப் போய் விட்டது.
சென்னை:

சென்னை வாசிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதமும், இந்த ஆண்டு நவம்பர் மாதமும் சோதனைக் காலமாகவே மாறிப் போய் விட்டது.

கடந்த ஆண்டைப் போல மழை கொட்டோ, கொட்டென்று கொட்டி வெள்ளம் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்கிற ஏக்கமே சென்னை மாநகர் முழுவதும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. இதனை தொடர்ந்து மழை வெள்ளத்தை தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர். அடையாறு ஆற்றங்கரையோரமாக வசித்த மக்கள் வெள்ளத்தின் பிடியில் மீண்டும் சிக்கிவிடக் கூடாது என்கிற பயத்தில் தத்தளித்துக் கொண்டே இருந்தனர். ஆற்றங்கரையோரமாக வசித்த பலர் வீடுகளையும் காலி செய்தனர். ஆனால் மழைக்கான அறிகுறிகளே தென்படவில்லை. இதனால் வெள்ளப்பாதிப்பு பற்றிய பயத்தில் இருந்து பொது மக்கள் மீண்டு இருந்தனர்.

இந்நிலையில் தான் சுனாமி போல பிரதமர் மோடியின் அறிவிப்பு வெளியானது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அவர் கடந்த 8-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் கடந்த ஆண்டு நவம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை போல இந்த ஆண்டு நவம்பரில் பணப் பிரச்சனையால் சென்னை வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் போது வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்கி இருந்தது. தங்களின் தாகத்தை தீர்ப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் தவித்தனர். அதே போன்று ஒரு நிலைமையையே தற்போதும் சென்னை வாசிகள் சந்தித்தனர்.

500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்ததால் கை செலவுக்கு கூட பணம் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் கையில் பணம் இருந்தும் அதனை வைத்து அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

கூடவே சில்லரை தட்டுப்பாடும் ஏற்பட்டதால் கடந்த 5 நாட்களாகவே பொது மக்கள் தவியாய் தவித்து வருகிறார்கள். இதன் மூலம் நவம்பர் மாதம் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சோதனை காலமாக மாறிவிட்டது.

இது தொடர்பாக வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தலங்களிலும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

போன வருடம் நவம்பர்ல வீட்டை சுற்றி தண்ணி இருந்தும் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டோம்.... இந்த வரு‌ஷம் கை நிறைய பணம் இருந்தும் செலவுக்கு காசு இல்லாமல் திண்டாடினோம்.

இருக்கு.... ஆனால் இல்ல. என்கிற வாசகம் அதிகமாக அனுப்பப்பட்டு வருகிறது.

வங்கியில் பணம் எடுக்க செல்பவர்கள் என்னென்ன கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றி வேடிக்கையான வாட்ஸ்-அப் பதிவு ஒன்று உலா வருகிறது.

அடையாள அட்டை, வங்கி கணக்குடன், தண்ணீர் பாட்டில், மதிய உணவு, குடை, தரையில் உட்கார பாய், தேவையான மருந்துகள், செல்போன் ரீசார்ஜ் கூப்பன், கொறித்து கொள்வதற்கு 6 கடலை பாக்கெட், மாலை நேர உணவு, 3 பிஸ்கெட் பாக்கெட்டுகள், பொறுமை ஆகியவற்றை தன்னுடன் எடுத்து செல்லுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தலை சுற்றி கீழே விழுந்தாலும், மயக்க மடைந்தாலும், உயிரே போனாலும் நாட்டுக்காக என மனதில் உறுதி வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News