செய்திகள்

குரோம்பேட்டை மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் மோதி அரசு பஸ் கவிழ்ந்தது

Published On 2016-11-09 13:42 IST   |   Update On 2016-11-09 13:42:00 IST
குரோம்பேட்டை மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதிய விபத்தில் 8 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
தாம்பரம்:

கோயம்பேட்டில் இருந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் சென்றது. டிரைவர் நாயக்பாட்சா வண்டியை ஓட்டினார். பஸ்சில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அதிகாலை 3 மணியளவில் குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலத்தில் பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

இதில் டிரைவர் நாயக் பாட்சா, நடத்துனர் விஜயகுமார் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் பல்லாவரம்-தாம்பரம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News