செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கைபந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Published On 2016-11-08 17:28 IST   |   Update On 2016-11-08 17:28:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் கைபந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் 2016-17 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் பள்ளி-விளையாட்டு விடுதிகளுக்கிடையே மாநில அளவிலான கையுந்து பந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையாட்டுப் பள்ளி -விளையாட்டு விடுதி மாணவ -மாணவியருக்கான மாநில அளவிலான கையுந்துபந்து விளையாட்டுப் போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றது.

இதில் மாணவ, மாணவிகள் இருபாலருக்கும் 17 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டிகள் நடை பெற்றது. இப்போட்டியில் மாணவர்கள் பிரிவில் திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டுப் பள்ளி-விளையாட்டு விடுதி மாணவர்களும், மாணவிகள் பிரிவில் சென்னை, ஈரோடு, நாகர்கோயில், தேனி மற்றும் தர்மபுரி மாவட்ட விளையாட்டுப் பள்ளி-விளையாட்டு விடுதி மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினார்கள்.

இப்போட்டியில் 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் சென்னை விளையாட்டு விடுதி மாணவிகள் முதலிடத்தையும், தர்மபுரி விளையாட்டு விடுதி மாணவிகள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் சென்னை விளையாட்டு விடுதி மாணவிகள் முதலிடத்தையும், ஈரோடு விளையாட்டு விடுதி மாணவிகள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

இதேப் போன்று 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் தஞ்சாவூர் விளையாட்டு விடுதி மாணவர்கள் முதலிடத்தையும், திருச்சி விளையாட்டு விடுதி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். 19 வயதிற்குட்ட மாணவர்கள் பிரிவில் திருநெல்வேலி விளையாட்டு விடுதி அணி முதலிடத்தையும், திருச்சி விளையாட்டு விடுதி அணி இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

இந்த கையுந்துப்பந்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டதுடன் இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணியினர் மாநில அளவிலான குடியரசுதின, பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர் என்றும் கலெக்டர் கணேஷ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல முதுநிலை மேலாளர் கீதாஞ்சலி ரத்னமாலா, மாவட்ட விளையாட்டு அலுவலர். வாஞ்சிநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.

Similar News