செய்திகள்

நடத்தையில் சந்தேகத்தால் மனைவி அடித்துகொலை: கணவர் போலீசில் சரண்

Published On 2016-11-07 16:56 IST   |   Update On 2016-11-07 16:56:00 IST
மயிலாடுதுறை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி அடித்துகொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார்.

தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தெட்சணா மூர்த்தி(45). இவர் மும்பையில்  டிரைவர், மற்றும் போர்வெல் வேலை செய்து வருகிறார். இவரது அக்கா ராணி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் வசித்து வருகிறார். அவருடைய மகள் நித்தியாவை(32) கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜவகர், சாமு என்ற 2 மகன்களும் சத்யா என்ற 1 மகளும் உள்ளனர்.

தெட்சணாமூர்த்தி 3 மாதத்திற்கு ஒரு முறை மும்பையிலிருந்து வீட்டிற்கு வந்து செல்வார். இதனிடையே மனைவி நித்தியாவின் நடத்தையில் சந்தேகமடைந்ததால் கணவன்-மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதனால் கடந்த ஆண்டு நித்தியா கனவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம். ஓராண்டு கழித்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு தெட்சணாமூர்த்தி தனது அக்காவீட்டிற்கு சென்று மனைவியை சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு கணவன், மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தெட்சணாமூர்த்தி, மனைவியை கட்டையால் அடித்ததில் தலையில் பலத்த காயமடைந்த நித்தியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த செம்பனார் கோவில் போலீசார் நித்தியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.

இதையடுத்து தெட்சணா மூர்த்தி செம்பனார்கோவில் போலீசில் மனைவியை கொலை செய்ததாக கூறி சரணடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News