செய்திகள்

காரைக்குடி போலீஸ் நிலையம் அருகில் மூதாட்டியிடம் 11 பவுன் நகை பறிப்பு

Published On 2016-11-07 15:59 IST   |   Update On 2016-11-07 15:59:00 IST
காரைக்குடியில் மூதாட்டியிடம் 11 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் நேற்று மாலை காரைக்குடியில் அதிரடி சோதனை நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட போலீசார் முக்கிய விடுதிகள், மக்கள் கூடும் இடம், கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை காரைக்குடி 100 அடி ரோட்டை சேர்ந்த ஆனந்தவள்ளி (வயது64) என்பவர் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வழியில் இருந்த ஒரு மரத்தில் அவர் பூக்களை பறித்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் ஆனந்தவள்ளி கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். கொள்ளை நடைபெற்ற இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தான் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் உள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆனந்தவள்ளி கொடுத்த புகாரின்பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Similar News