செய்திகள்

விராலிமலை வட்டாரத்தில் விதை கிராம திட்ட பயிற்சி

Published On 2016-11-03 18:01 IST   |   Update On 2016-11-03 18:02:00 IST
விராலிமலை வட்டாரத்தில் விதை கிராம திட்ட பயிற்சி மருதம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

விராலிமலை

விராலிமலை வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் (2016-2017) மாவட்டத்திற்குள்ளான பயிற்சி என்ற இனத்தின் கீழ் விதை கிராம திட்ட (நெல்) விவசாயிகள் பயிற்சியானது மருதம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சி கூட்டத்திற்கு வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளரும், வேளாண்மை உதவி இயக்குநருமான எட்வர்ட் சிங் தலைமை வகித்து விதை கிராம பயிற்சியின் நோக்கத்தினை குறித்தும், தற்போது செயல்படுத்தபட்டு வரும் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் கூறினார்.

வேளாண்மை அலுவலர் (உழவர் பயிற்சி நிலையம்) செல்வி விதை இரகங்களை தேர்வு செய்வது பற்றியும், விதையை கடினப்படுத்துதல் ,உயிரியல் , இராசாயன மற்றும் உயிர் உரங்கள் கொண்டு விதை நேர்த்தி செய்வது பற்றியும், இயந்திரம் மூலம் விதைப்பு செய்தல்,பயிர் இடைவெளியை பராமரித்தல் , களை நிர்வாகம், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் மற்றும் அவற்றை ஒருங்கணைந்த முறையில் கட்டுபடுத்துவது பற்றியும் , இதர நேர்த்திகள் பற்றியும் விரிவாக விளக்கி கூறினார்.

உதவி விதைஅலுவலர் பூபதி விதைப் பண்ணை பதிவு செய்வது பற்றியும், விதைச் சான்றளிப்பு கட்டணங்கள் பற்றியும், கலப்பின செடிகளை அகற்றுவது பற்றியும் , விதைகளை உலர்த்துதல் பற்றியும், சுத்திகரிப்பு பற்றியும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

உதவி வேளாண்மை அலுவலர் சங்கரபாண்டியன் நெல் வயலில் இலை வண்ண அட்டையை பயன்படுத்தி எவ்வாறு உரத் தேவையை அறிந்து உரமிடுவது பற்றி செயல்விளக்கம் செய்து காண்பித்தார். முன்னதாக இவர்களை வரவேற்று வட்டார தொழில்நுட்ப மேலாளர் த.லெட்சுமி பிரபா பேசினார்.

இப்பயிற்சியில் கலந்து கொண்ட 40 விவசாயிகளுக்கும் தொழில்நுட்ப கையேடு, குறிப்பேடு போன்றவை வழங்கப்பட்டன. இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் உமா மகேஸ்வரி , சுப்பிரமணி , ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் துணை வேளாண்மை அலுவலர்வெங்கடாசலபதி நன்றி கூறினார்.

Similar News