மேட்டூர் அணை நீர்மட்டம் 46 அடியாக குறைந்தது
மேட்டூர்:
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் பலமுறை உத்தரவிட்டும் கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததாலும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து முற்றிலும் சரிந்தது.
மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து 116 கன அடியாக இருந்தது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து இன்று 46.29 அடியானது.
இதற்கிடையே மேட்டூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்றிரவு 11 மணி முதல் வானில் திடீரென கரு மேகங்கள் திரண்டன. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை 2 மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் குளிர்ந்த காற்று வீசியதுடன் ரம்மியமான சூழல் நிலவியது.