கந்திலி போலீஸ் நிலையத்தில் கைதி தப்பி ஓட்டம்: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
வேலூர்:
திருப்பத்தூர் அடுத்த கந்திலி லக்கி நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் முகம்மது கலீல் என்பவரின் மகன் பரசுல்லா (வயது 40). இவரது உறவினர், அதே பகுதியில் வசிக்கும் அமீர் பாஷா. இவர், தனியார் வங்கி ஒன்றில் ரூ.1½ லட்சம் கடன் வாங்கினார்.
அந்த வங்கிக் கடனை அமீர்பாஷா முறையாக செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. கடனை தவணை முறையில் வசூல் செய்ய வங்கி ஊழியரான திருப்பத்தூர் ஜெய்பீம் நகரை சேர்ந்த சிவானந்தம், அமீர்பாஷா வீட்டுக்கு சென்றார்.
அப்போது, அமீர்பாஷா தன்னிடம் பணம் இல்லை எனக்கூறியுள்ளர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அமீர்பாஷா பெற்ற கடனுக்கு பரசுல்லா பொறுப்பேற்றார். பணத்தை தருவதாக உத்தரவாதமும் கொடுத்தார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 26-ந் தேதி பணத்தை கேட்டு வங்கி ஊழியர் சிவானந்தம், பரசுல்லா வீட்டிற்கே சென்றார். அப்போது, பரசுல்லா பணத்தை தரமுடியாது எனக்கூறி சிவானந்ததை விரட்டியடிக்க முயன்றார்.
இதனால் அவர்களுக்குள் மோதல் மூண்டது. பரசுல்லா ஆத்திரமடைந்தார். வங்கி ஊழியர் சிவானந்ததை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சிவானந்தம், கந்திலி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து பரசுல்லாவை பிடித்து வந்து விசாரித்தார். அதன்பிறகு, கைது நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது, போலீஸ் நிலையத்தில் இருந்து பரசுல்லா தப்பி ஓடி விட்டார்.
பரசுல்லாவை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். விசாரணை கைதி தப்பி ஓடிய புகாரில், சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணனை (52) சஸ்பெண்டு செய்து எஸ்.பி. பகலவன் உத்தரவிட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்ற வழக்கில் இருந்து தங்களது மகன்களை திருப்பத்தூர் டவுன் போலீஸ் ஏட்டு மற்றும் கந்திலி சப்-இன்ஸ்பெக்டர் தப்பவிட்டனர். இந்த புகார் தொடர்பாக, சப்-இன்ஸ்பெக்டரும், ஏட்டுவும் சஸ்பெண்டு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.