செய்திகள்

புதுக்கோட்டை அருகே நிதி நிறுவன பெண் ஊழியர் கழுத்தை நெரித்து கொலை

Published On 2016-10-24 19:52 IST   |   Update On 2016-10-24 19:52:00 IST
புதுக்கோட்டை அருகே தனியார் நிதி நிறுவன பெண் ஊழியர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் முத்து துரை . இவரது மனைவி திவ்யா (வயது 24). இவர்களுக்கு கிருத்திகா, பிரித்திகா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

திவ்யா அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அயர்ந்து தூங்கினார். இன்று காலை எழுந்து பார்த்த போது திவ்யாவை காணவில்லை. இதையடுத்து முத்து துரை மனைவியை அப்பகுதியில் தேடினார். அப்போது அங்குள்ள மல்லிகை தோட்டத்தில் திவ்யா கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திவ்யாவை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திவ்யா இறந்து கிடந்த இடம் அருகே ஒரு செல்போன் கிடந்தது. அதனை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News