சிங்கம்புணரியில் 6 கடைகளில் பணம் கொள்ளை
சிங்கம்புணரி:
சிங்கம்புணரியில் உள்ள காரைக்குடி-திண்டுக்கல் சாலையில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள், டிராவல்ஸ் நிறுவனம் மற்றும் இரும்பு கடை உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றை நேற்று இரவு விற்பனைக்குப் பின் உரிமையாளர்கள் அடைத்து சென்றனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை அந்த கடைகளுக்கு பேப்பர் போடுபவர் அங்கு வந்துள்ளார். அப்போது 6 கடைகளின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் கடை உரிமையாளர்களான ரவி, ரேவதி, கலைமாறன், ஜாபர் அலி மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். டிராவல்ஸ் நிறுவனத்தில் ரூ.5 ஆயிரத்து 100-ம், கலைமாறன் என்பவரது உதிரி பாகங்கள் விற்பனை கடையில் ரூ.5 ஆயிரமும், ஜாபர் அலியின் இரும்பு கடையில் ரூ.20 ஆயிரமும் கொள்ளை போயிருப்பது முதற்கட்டமாக தெரிய வந்தது.
மற்ற கடைகளில் கொள்ளைபோன பொருட்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த துணிகர கொள்ளை குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் நேற்று இரவு சிங்கம்புணரியில் ஆய்வு நடத்தினார். அவர் சென்ற பிறகு இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.