செய்திகள்

அரசு அதிகாரி மனைவி அடித்துக்கொலை: கொலையாளியை பிடிக்க முயன்ற வங்கி ஊழியர் மீதும் தாக்குதல்

Published On 2016-10-20 22:57 IST   |   Update On 2016-10-20 22:57:00 IST
புதுக்கோட்டையில் பட்டப்பகலில் அரசு அதிகாரி மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலையாளியை பிடிக்க முயன்ற வங்கி ஊழியர் டியூப்லைட்டால் குத்தப்பட்டார்.
புதுக்கோட்டை திருகோகர்ணம் கல்யாணராமபுரம் 2–ம் வீதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கிருத்திகாதேவி (வயது 36). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2–வது மாடியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிருத்திகாதேவி நேற்று மதியம் வெளியில் சென்றுவிட்டு மாடி படியில் ஏறிக்கொண்டிருந்த போது திடீரென அலறியபடி கீழே விழுந்தார்.

அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தபோது தலையின் பின்புறம் மற்றும் கழுத்து ஆகிய பகுதியில் படுகாயங்களுடன் கிருத்திகாதேவி கிடந்தார். உடனே இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கிருத்திகாதேவியை பரிசோதனை செய்தபோது அவர் இறந்தது தெரியவந்தது.

இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் வசிக்கும் தனியார் வங்கி ஊழியர் அசன்முகமது (26) கழுத்தில் காயத்துடன் அங்கு இருந்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அசன் முகமதுவிடம் நடத்திய விசாரணையில், கிருத்திகாதேவியின் அலறல் சத்தம் கேட்டவுடன் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது மர்மநபர் கிருத்திகாதேவியை தாக்கினார். நான் மர்மநபரை பிடிக்க முயன்றபோது, அங்கிருந்த டியூப்லைட்டால் எனது கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார் என தெரிவித்தார். இதையடுத்து அசன்முகமது புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

கிருத்திகாதேவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News