செய்திகள்

குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

Published On 2016-10-18 16:48 IST   |   Update On 2016-10-18 16:48:00 IST
புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். அப்போது பட்டா மாறுதல் கோரி 30 மனுக்கள், புதிய குடும்ப அட்டை கோரி 15 மனுக்கள், காவல்துறை நடவடிக்கைக்காக 18 மனுக்கள், வேலைவாய்ப்பு கோரி 14 மனுக்கள், பசுமை வீடு கோரி 28 மனுக்கள், கல்வி உதவித்தொகை கோரி 3 மனுக்கள்,

முதியோர் உதவித்தொகை கோரி 32 மனுக்கள், ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக 15 மனுக்கள் உள்பட 270 மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழங்கப்பட்டது. கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிதம்பரம், தனித்துணை கலெக்டர் சூரியகலா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புதுக்கோட்டை கீரனூர் பள்ளத்துப்பட்டி அண்ணாநகர் நரிக்குறவர்காலனியே சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 120 ஓட்டுகள் உள்ளது. நாங்கள் 4-வது வார்டில் வசித்து வருகிறோம். இதில் 3-வது வார்டில் 16 பேரையும் 5-வது வார்டில் 36 பேரையும் பிரித்து சேர்த்துவிட்டனர். 3-வது மற்றும் 5-வது வார்டில் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் 4-வது வார்டில் வீடு உள்ளது.

எனவே பிரிக்கப்பட்டவர்களை மீண்டும் 4-வது வார்டிலேயே சேர்க்க வேண்டும். இல்லை என்றால் அனைத்து தேர்தலையும் புறக்கணிப்போம் மற்றும் எங்களின் வாக்காளர் அட்டை மற்றும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை அனைத்தையும் திரும்ப ஒப்படைத்துவிடுவோம் என கூறியிருந்தனர்.

இதைப்போல எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த நரிக்குறவர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 42 குடும்பங்கள் உள்ளன. நாங்கள் கடந்த 16 ஆண்டுகளாக இதே பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் குடிநீர் வசதி கேட்டு ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரை குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

Similar News