செய்திகள்

சென்னையில் இருந்து புறப்பட்ட அந்தமான் விமானத்தில் எந்திர கோளாறு: 152 பயணிகள் உயிர் தப்பினர்

Published On 2016-10-16 09:33 GMT   |   Update On 2016-10-16 09:33 GMT
சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட தயாராக இருந்த விமானத்தை இயக்குவதற்கு முன்பு விமானி சோதனை செய்த போது எந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் 152 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஏர்-இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் 152 பயணிகள் ஏறி அமர்ந்து இருந்தனர். விமானத்தை இயக்குவதற்கு முன்பு விமானி சோதனை செய்த போது விமான எந்திரத்தில் கோளாறு இருப்பதை கண்டுபிடித்தார்.

இதுகுறித்து அவர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே ஊழியர்கள் வந்து எந்திர கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கோளாறு உடனடியாக சரி செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் 3 மணி நேரம் காத்து கிடந்தனர்.

இதையடுத்து மாற்று விமானம் 10.30 மணிக்கு அந்தமான் செல்லும் என்று பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பே விமானி சாமர்த்தியமாக எந்திர கோளாறை கண்டுபிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் 152 பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

Similar News