செய்திகள்

ஜெயலலிதா விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்: இளங்கோவன் பேட்டி

Published On 2016-10-15 13:10 IST   |   Update On 2016-10-15 13:10:00 IST
அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அவர் விரைவில் குணம் அடைய வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்
சென்னை:

முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் அன்று இரவே காய்ச்சல் குணப்படுத்தப்பட்டது.

ஆனாலும் சளி தொந்தரவு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் சிகிச்சையளிக்கப்பட்டது. பிசியோதெரபி டாக்டர்களும் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அப்பல்லோ டாக்டர்கள் மட்டுமின்றி லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினரும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் இன்னும் ஒருசில நாட்கள் சென்னையில் தங்கி இருந்து சிகிச்சை மேற்கொள்ள உள்ளனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கிருமி தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக அவர் சிகிச்சை பெறும் வார்டில் பார்வையாளர்கள் யாரும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் முதல்-அமைச்சரின் உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு தினமும் அரசியல் கட்சித் தலைவர்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்து விட்டு வந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிகிச்சையில் இருக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி விசாரித்தேன்.

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி கேட்டறிந்தேன்.

முதல்-அமைச்சர் விரைவில் குணம் அடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்ததாக கூறினார்கள்.

தொடர்ந்து முன்னேற்றம் இருப்பதால்தான் சிறப்பு டாக்டர்கள் வந்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள்.

எனவே அவர் பூரண குணமடைந்து விரைவில் முதல்-அமைச்சர் பணிக்கு திரும்ப வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News