ஜெயங்கொண்டத்தில் லாரி உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காவல்துறை சார்பில் லாரி உரிமையாளர்களுடன் ஆலோசணைக்கூட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் டி.எஸ்.பி. இனிகோ திவ்யன் கலந்துகொண்டு பேசியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் விபத்துகளில் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக 50 விபத்துகள் லாரிகளாளேயே நிகழ்ந்துள்ளது. எனவே லாரி உரிமையாளர்கள் தங்களது ஓட்டுனர்கள் குடிபோதையில் லாரிகள் இயக்க அனுமதிக்க கூடாது.
லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான பாரம் ஏற்றக்கூடாது. விபத்து ஏற்படும் பகுதிகளில் லாரிகளை நிறுத்தக்கூடாது. ஜெயங்கொண்டம் நகர் பகுதியில் காலை ஏழு மணிமுதல் 9 மணிவரையும், மாலை 3 மணியில் முதல் 5 மணிவரையும் கனரக வாகனங்களை இயக்க கூடாது.
லாரிகளில் மணல், சிமெண்ட் போன்ற பொருட்களை ஏற்றிச்செல்லும்போது கட்டாயம் தார்பாய் கொண்டு மூடவேண்டும். மேலும் அனைத்து லாரிகளிலும் 10 நாட்களுக்குள் வேக கட்டுபாட்டு கருவி பொருத்த வேண்டும்.
அப்படி பொருத்தாத லாரிகளை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என பேசினார். ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, தா.பழூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் திருமாவளவன், துணைத்தலைவர் செல்வம், செயலாளர் ராஜா, பொருளாளர் பாலு உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.