செய்திகள்

முதலமைச்சர் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுப்பிரமணியசாமி பேட்டி

Published On 2016-10-09 02:36 IST   |   Update On 2016-10-09 02:36:00 IST
முதல் அமைச்சர் பற்றி அவதூறு பரப்பினால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்பிரமணிய சாமி கூறினார்.
ஆலந்தூர்:

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, மும்பை செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைதான் முக்கியம். விடுதலைப்புலிகள், ஐ.எஸ்.ஐ.எஸ்., போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகமாக உள்ளது. இந்து முன்னணி தலைவர்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால் மக்களிடம் அச்சம் ஏற்பட்டு உள்ளது.

முதல்அமைச்சர்தான் அரசாங்கம் நடத்துகிறாரா? இல்லை முன்னாள் அரசு அதிகாரிகள் அரசாங்கத்தை நடத்துகிறார்களா? என தெரியவில்லை. இதனால் சிறிது காலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் சரியாகும் வரை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறி உள்ளேன். இதற்காக கவர்னர் பல அமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

முதல்அமைச்சர் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் உள்ளார். மேலும் மருத்துவமனையில் நீண்ட நாள் தங்கி இருக்க வேண்டும் என தெளிவாக அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்துக்கு தற்காலிமாக ஒரு முதல்-அமைச்சரை நியமிக்க வேண்டும்.  

தமிழக முதல்-அமைச்சர் பற்றி அவதூறாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரப்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. நாட்டில் கலவரம் ஏற்படுத்த இதுபோன்ற செய்திகளை பரப்புகின்றனர்.

தமிழகம் தனது சொந்த காலில் நிற்கவேண்டும். காவிரியில் இருந்து தண்ணீர் கேட்டு நிற்பதை விட கடலில் இருந்து குடிநீரை உருவாக்கி மக்களுக்கு வழங்கவேண்டும். தமிழகத்தில் 24 மணி நேரமும் குழாய்களில் தண்ணீர் வினியோகம் செய்யப்படவேண்டும்.

முதலில் இந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்து விட்டு பின்னர் காவிரியில் நமது உரிமையை விட்டு கொடுக்காமல் போராடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News