குறிஞ்சிப்பாடியில் வாலிபர் அடித்துக்கொலை
குறிஞ்சிப்பாடி:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வெங்கடாம்பேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து என்கிற ரத்தினவேல்(வயது 32).
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ளவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.
இந்தநிலையில் இன்று காலை அந்த பகுதியில் ரோட்டின் ஓரத்தில் முத்து பிணமாக கிடந்தார். அவரது கை,கால்கள் கட்டப்பட்டிருந்தன.
இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
முத்துவின் பிணத்தை கைப்பற்றி குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முத்துவை கை, கால்களை கட்டி மர்ம மனிதர்கள் தாக்கி கொலை செய்து விட்டு ரோட்டின் அருகே அவரது பிணத்தை வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முத்துவுக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக அவர்கள் முத்துவை பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். முத்து மட்டும் வெங்கடாம் பேட்டையில் தனியாக வசித்து வந்தார்.