வேதாரண்யம் அருகே 2 வீடுகள் எரிந்து சாம்பல்
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி தெற்கு செட்டி தெருவை சேர்ந்தவர்கள் பட்டம்மாள், சரோஜா. இவர்கள் இருவரது வீடும் அருகருகே உள்ளது.
நேற்று இரவு இவர்களது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென்று எரியத் தொடங்கியது. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் வீட்டில் இருந்த பணம், தளவாட பொருட்கள் உள்ளிட்டவைகள் எரிந்து சாம்பல் ஆனது.
சேத மதிப்பு ரூ. 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் வேதாரண்யம் தாசில்தார் இளங்கோவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணநிதி, அரிசி, வேட்டி-சேலைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.