கீழ்வேளூர் அருகே தலை துண்டித்து பெண் கொலை: மகன் வெறிச்செயல்
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வண்டலூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி பாக்கியம் (65).
கடந்த சில வருடங்களுக்கு முன் குப்பன் இறந்து விட்டார். இவர்களது மகன் ஜீவா (42). காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். திருமணமாகி உமா என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
ஜீவா அடிக்கடி வியாபாரத்திற்கு செல்லாமல் குடித்து விட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது தாயிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த ஜீவா தனது தாயிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் பாக்கியம் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.இதில் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த ஜீவா அருகில் இருந்த அரிவாளை எடுத்து பாக்கியத்தின் கழுத்தில் சரமாரி வெட்டினார். இதில் தலை துண்டானது.
அவர் சம்பவ இடத்திலே இறந்தார். கொலையாளி ஜீவா தப்பி ஓடி விட்டார். சம்பவ இடத்தில் உறவினர்கள் கூடினர். அங்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.