செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளை: முகமூடி கும்பல் அட்டூழியம்

Published On 2016-09-21 14:28 IST   |   Update On 2016-09-21 14:28:00 IST
கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் வசித்து வருபவர் அழகர்சாமி கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுபா.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே உள்ள கீழ்நத்த வடக்கூர் ஆகும்.

நேற்று இரவு அழகர்சாமி கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சுபாவும், 2 குழந்தைகளும் இருந்தனர்.

நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டு கதவை தட்டும் சத்தம் கேட்டது. கணவர் வந்திருப்பதாக நினைத்து சுபா கதவை திறந்தார். அப்போது மூகமுடி அணிந்தும் தலையில் ஹெல்மெட் மாட்டியபடி நின்ற 2 வாலிபர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்தனர்.

அவர்கள் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து, சத்தமிட்டால் குத்தி கொன்றுவிடுவதாக சுபாவை மிரட்டினர். மேலும் அவரது கழுத்திலும் கத்தியை வைத்து இருந்தனர். பின்னர் பீரோவை திறக்கும்படி சுபாவை மிரட்டினர். அவர் திறந்ததும் அதிலிருந்த 8 பவுன் நகை, வெள்ளி பொருட்களை சுருட்டினர். மேலும் சுபா அணிந்திருந்த நகையையும் கொள்ளையர்கள் பறித்தனர்.

இதைத் தொடர்ந்து சுபாவை துப்பட்டாவால் கட்டிப்போட்டு வாயிலும் துணியை திணித்து மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

அதிகாலை 2.30 மணி அளவில் பணி முடிந்து அழகர்சாமி ‘‘வீட்டிற்கு வந்த போது மனைவியை கட்டிப்போட்டு கொள்ளை நடந்து இருப்பது தெரிந்தது. அவர் மனைவி சுபாவை மீட்டார்.

கொள்ளையர்கள் புகுந்த அழகர்சாமியின் வீட்டின் அருகே அடுத்தடுத்து வீடுகள் உள்ளன. கொள்ளையர்களின் மிரட்டலுக்கு பயந்து சுபா சத்தமிடாததால் கொள்ளை நடந்தது அக்கம் பக்கத்தினருக்கு உடனடியாக தெரியவில்லை.

அழகர்சாமி வீட்டில் இல்லாததை நோட்டமிட்டு இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். எனவே அவரை பற்றி நன்கு அறிந்த நபர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது குறித்து ஆரம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News