செய்திகள்

கண்டமங்கலத்தில் ஆசிரியரை காரில் கடத்தி நகை-பணம் கொள்ளை

Published On 2016-09-21 12:04 IST   |   Update On 2016-09-21 12:04:00 IST
கண்டமங்கலத்தில் ஆசிரியரை காரில் கடத்தி நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விழுப்புரம்:

புதுவை மாநிலம் ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலு (வயது 53). இவர் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பகண்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். பகண்டை, பக்கிரிப்பாளையம், ரெட்டியார்பாளையம் பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை வாங்க தினமும் பாலு மோட்டார் சைக்கிளில் சென்று வருவது வழக்கம்.

அதன்படி, நேற்று இரவு பக்கிரிப்பாளையம் பகுதியில் கடன் பணத்தை வசூல் செய்துவிட்டு ரூ.50 ஆயிரம் பணத்துடன் பாலு மோட்டார் சைக்கிளில் ரெட்டியார்பாளையம் நோக்கி புறப்பட்டார். அப்போது அவரை ஒரு கார் வழிமறித்து நின்றது.

கண் இமைக்கும் நேரத்தில் காரில் இருந்து இறங்கிய 3 பேர் பாலுவை காரில் கடத்திக் கொண்டு வேகமாக சென்றனர். காருக்குள் வைத்து தாக்கி, அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை பறித்தனர். பின்னர், பாலுவை காட்டேரிகுப்பம் பகுதியில் இறங்கிவிட்டு, அந்த கும்பல் காரில் தப்பிச் சென்றது.

இது குறித்து பாலு கண்டமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் அந்த மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News