காஞ்சிகோவில் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு
ஈரோடு:
ஈரோட்டை அடுத்த கங்காபுரம் மெயின் வீதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சாமியாத்தாள் (வயது 49). இவர் தனது உறவினர் விஜயலட்சுமி (44) என்பவருடன் மொபட்டில் சென்றார்.
பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவிலில் உள்ள தங்களது உறவினர் உடல்நலம் இல்லாமல் இருந்ததால் அவரை பார்த்து விட்டு இவர்கள் இருவரும் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
மொபட்டை விஜய லட்சுமி ஓட்டி சென்றார். பின்னால் சாமியாத்தாள் உட்கார்ந்து இருந்தார்.
இவர்கள் சென்ற மொபட் காஞ்சிக்கோவில் கவுண்டம்பாளையம் வாய்க்கால் மேடு என்ற இடம் அருகே வந்து கொண்டு இருந்தது.
அப்போதுபின்னால் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.இவர்களில் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்தவன் தலையில் ஹெல்மெட் போட்டு இருந்தான்.
ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் விஜய லட்சுமியும், சாமியாத்தாளும் மொபட்டில் சென்ற பொது திடீர் என்று பின்னால் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்த ஆசாமி சாமியாத்தாளின் கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்கசெயினை பறித்தான். பிறகு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் வேகமாக தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவத்தில் மொபட்டில் சென்ற 2 பெண்களும் தடுமாறி கீழே விழுந்தனர். இதில் காயம் அடைந்த அவர்கள் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிளில் வந்து செயினை பறித்து சென்ற 2 ஆசாமிகளுக்கும் சுமார் 25 வயதிருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் காஞ்சிகோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.