செய்திகள்
தாம்பரம், அருகே அடையாறு ஆற்றில் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடந்தபோது எடுத்த படம்.

தாம்பரம் அருகே அடையாறு ஆற்றில் தூர்வாரும் பணி தொடங்கியது

Published On 2016-09-21 07:44 IST   |   Update On 2016-09-21 07:44:00 IST
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே முடிச்சூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர் பகுதிகளில் அடையாறு ஆற்றை சீரமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறையினர் தொடங்கினர்.
தாம்பரம்:

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே முடிச்சூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர் பகுதிகளில் அடையாறு ஆற்றை சீரமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறையினர் தொடங்கினர்.

சென்னையை அடுத்த தாம்பரம் அருகேயுள்ள முடிச்சூர், வரதராஜபுரம் ஊராட்சி பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதில் பலகோடி மதிப்புள்ள உடைமைகளை பொதுமக்கள் இழந்தனர். ஆதனூர் பகுதியில் தொடங்கும் அடையாறு ஆறு வரதராஜபுரம், முடிச்சூர், பெருங்களத்தூர் வழியாக செல்கிறது.

அடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், இதை வலியுறுத்தி பெருங்களத்தூரில் முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் அடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்புகள் மற்றும் புதர்களை அகற்றி கரைகளை பலப்படுத்தி தூர்வாரும் பணிகளை பொதுப்பணித்துறையினர் போர்க்கால அடிப்படையில் செய்து வருகின்றனர். இதனால் முடிச்சூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர் பகுதிகளில் அடையாறு ஆற்றில் நீர் தங்கு தடையின்றி வேகமாக செல்கிறது.

மழைக்காலத்திற்கு முன்பே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அடையாறு ஆற்றை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்ட தமிழக அரசுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Similar News