செய்திகள்

ராம்குமாரின் சாவில் மர்மம்: சி.பி.ஐ. விசாரணை வேண்டும் - திருமாவளவன் பேட்டி

Published On 2016-09-19 12:43 IST   |   Update On 2016-09-19 12:43:00 IST
ராம்குமாரின் சாவில் மர்மம் உள்ளதால் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கடலூரில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடலூர்:

கடலூரில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்று போலீசார் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

அவர் சாவில் மர்மம் உள்ளது. மேலும் ராம்குமாரின் பெற்றோர் அவரது வக்கீல் ஆகியோர் ராம்குமார் தற்கொலை செய்யவில்லை என்று கூறுகிறார்கள். இதனால் இதை புறம்தள்ள முடியாது.

சுவாதி கொலையையும் ராம்குமார் இறந்ததையும் விசாரிக்க சி.பி.ஐ. விசாரணை வேண்டும். ராம்குமார் இறந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு போலீசும், உயர்நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவும் விசாரணை நடத்தும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதி இல்லாமல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிதான் விசாரிக்க வேண்டும்.

ராம்குமாரின் பெற்றோர் கூறுகின்ற மருத்துவ குழுதான் ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.

அப்போது தடயவியல் நிபுணர்களும் உடன் இருக்க வேண்டும். மேலும் ராம்குமாரின் சாவு தற்கொலை என்று கூறி சுவாதி கொலையில் உள்ள பின்னணியை மூடி மறைக்க முடியாது.

பேரறிவாளன் சமீபத்தில் சிறையில் தாக்கப்பட்டார். இதில் எதிர்பாராமல் பேரறிவாளன் இறந்திருந்தால் அதனையும் தற்கொலை என்று கூறி போலீசார் மறைத்திருப்பார்கள். இதுபோன்ற சம்பவங்கள் தற்போது சிறையில் அதிகளவில் நடந்து வருகிறது.

காஷ்மீரில் 17 ராணுவ வீரர்கள் இறந்தது மத்திய அரசின் பொறுப்பற்ற செயல்தான் காரணம். தற்போது இந்தியா முழுவதும் தலீத் மற்றும் சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களை காக்க பிரதமர் தவற விட்டார். அவர்களை பாதுகாக்க வேண்டும்.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். கர்நாடகாவில் உள்ள பாரதிய ஜனதாவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.

இதையடுத்து கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை சம்பவத்தால் ரூ.25 ஆயிரம் கோடி வீணாகியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே இழப்பீடு வழங்கவேண்டும்.

காவிரி பிரச்சனை தொடர்பாக மேற்பார்வை குழு இன்று கூடுகிறது. தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இறுதி தீர்ப்பு இன்று தான் வருகிறது.

இந்தநிலையில் சம்பா சாகுபடிக்கு 52.5 டி.எம்.சி.தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடுவார்கள். ஆனால் தற்போது இடைக்கால தீர்ப்பின்படி 12 டி.எம்.சி. தண்ணீரை தான் திறந்துள்ளார்கள். இதனால் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழக அரசு கடந்தமுறை திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவைப்போல் இந்த ஆண்டும் திறந்து விட வேண்டும் என்று காவிரி பிரச்சனை தொடர்பாக இன்று நடைபெறும் மேற்பார்வை கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News