செய்திகள்

நாகர். உடுப்பி ஓட்டல் முன்பு தலித் அமைப்பினர் திடீர் மறியல்: 23 பேர் கைது

Published On 2016-09-16 14:53 GMT   |   Update On 2016-09-16 14:53 GMT
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து வடசேரியில் உள்ள உடுப்பி ஓட்டல் முன்பு தலித் அமைப்பினர் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதில் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில்:

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. குமரி மாவட்டத்தில் பல்வேறு அமைப்பினரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். நாகர்கோவில் வடசேரியில் உள்ள உடுப்பி ஓட்டல் முன்பு தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பினர் அதன் தலைவர் தினகரன் தலைமையில் மறியல் போராட்டம் செய்ய முயன்றனர்.

இதற்கு மாநில இளைஞரணி தலைவர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். ஏராளமான தொண்டர்களுடன் போராட்டத்திற்கு சென்றவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரின் பாதுகாப்பை மீறி ஓட்டலுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பாட்டு வாக்குவாதம் மூண்டது.

இதனால் போராட்டக்காரர்கள் ஓட்டல் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.

Similar News