செய்திகள்

தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்: திருச்சியில் வைகோ பேட்டி

Published On 2016-09-16 10:39 GMT   |   Update On 2016-09-16 10:39 GMT
தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சி:

கர்நாடக அரசை கண்டித்து திருச்சியில் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்பட 130 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். முன்னதாக வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் 64 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை 13 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் திறந்து விட்டுள்ளது. இது இல்லாமல் மத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்துள்ளது. மத்திய அமைச்சர்கள், பிரகாஷ் ஜவடேகர், உமாபாரதி, சதானந்தகவுடா ஆகியோர் டெல்லியில் கூட்டங்கள் நடத்தி மசோதாவை நிறைவேற்றியுள்ளனர். அதில் அந்தந்த மாநில அரசுகளே அணை பாதுகாப்பை தீர்மானிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதாவால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா அணைகளை இடிப்பார்கள், கட்டுவார்கள். இதனால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்காது. தமிழ்நாடு வறண்டு எத்தியோப்பியா மாதிரி ஆகிவிடும்.

அந்தந்த மாநில அரசுகளே அணை பாதுகாப்பை தீர்மானிக்கலாம் என்று சொன்னால் அந்தந்த மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை மாநில அரசுகளே நிர்வகிக்கலாம் என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும். கர்நாடக போராட்டத்தில் தமிழக வாலிபர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். லாரி டிரைவர் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். 500 லாரிகள், 50 பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்று தமிழகத்தில் அமைதியான முறையில் விவசாயிகள், அரசியல் கட்சியினர், வியாபாரிகள் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழர்கள் தங்களது உணர்வை அமைதியான முறையில் வெளிப்படுத்தியுள்ளனர். இதனை மோடி தலைமையிலான அரசு புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் மீது தாக்குதல் நடந்த பிறகு, இரு மாநிலமும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியது தமிழர்களுக்கு செய்த துரோகமாகும்.

முந்தைய காங்கிரஸ் அரசு செயல்படாமல் தமிழகத்திற்கு காவிரி நீர் பெற்று தர காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறை ஆணையத்தையும் மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News