செய்திகள்

புதுவை புதிய பஸ் நிலையத்தில் தனி நபர் நடத்திய பஸ் மறியல் போராட்டத்தால் பரபரப்பு

Published On 2016-09-16 08:23 GMT   |   Update On 2016-09-16 08:23 GMT
தனி நபர் நடத்திய பஸ் மறியல் போராட்டத்தால் புதுவை புதிய பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி:

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்புகள் மற்றும் வணிகர் கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தனியார் பஸ்கள், ஆட்டோ, டெம்போ ஓடவில்லை. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அதே வேளையில் புதுவையில் தமிழகம் மற்றும் புதுவை அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தமிழக அரசு பஸ் ஒன்று புறப்பட தயாரானது. அப்போது திடீரென ஒருவர் பஸ்சை இயக்க கூடாது என வலியுறுத்தி அந்த பஸ் முன்பு படுத்து போராட்டம் நடத்தினார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அருகில் இருந்த போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்திய அந்த நபரை குண்டு கட்டாக தூக்கி சென்று உருளையன் பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

விசாரணையில் அவர் பெயர் சந்திரன் (வயது 50) என்பதும், டாக்டர் அம்பேத்கார் மக்கள் சங்க நிர்வாகி என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

தனி நபர் நடத்திய பஸ் மறியல் போராட்டத்தால் புதுவை புதிய பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News