செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்லும் விமானத்தில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் இலங்கை செல்லும் விமானத்தில் ஏற வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த ராஜசேகர், குமரேசன், செந்தில்குமார் ஆகியோரது கைப்பையை சோதனை செய்த போது கட்டுகட்டாக அமெரிக்க டாலர், யூரோ பணம் இருந்தது. இதற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை.
இதைத் தொடர்ந்து வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும்.
இவர்களுக்கு வெளிநாட்டு பணம் கிடைத்தது எப்படி? யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.